Wednesday, March 3, 2010

மேட்டுப்பாளையம் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேச்சு




மேட்டுப்பாளையம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மீலாது நபி பொதுக் கூட்டம் 27-02-2010 அன்று பெரிய பள்ளிவாசல் மீலாது திடலில் நகர தலைவர் டி. ஷாஜஹான் தலைமையில் டாக்டர் ஜக்கரிய்யா, வளர்மதி அமீர் அம்ஜா, எம்.இ. அயூப், அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடபெற்றது.
நகர துணைத்தலைவர் எஸ்.எம். அய்யூப் வரவேற்றார் - மாநில துணைத் தலைவர்கள் கோவை எல்.எம். அப்துல் ஜலீல், திருப்பூர் பி.எஸ்.ஹம்சா, மாவட்ட தலைவர் எஸ்.எம். காசிம், செயலாளர் பி.எஸ்.எம் உசேன், முன்னாள் மாவட்ட தலைவர் பி.எஹச். முஹம்மது குட்டி, உமாக்கள் அணி அமைப்பாளர் மௌலவி ஏ.எம் சுல்தான், மௌலவி இப்றாஹிம் , மௌலவி ஏ.எம் ஜாபர் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திண்டுக்கல் மௌலவி ஏ.எஸ்.எம் முஹம்மது ஹாரூன், கோவை மௌலவி எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர். இந்திய யூனியன் முஸ்லிம் லிக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சிறப்புரையாற்றியபோது கூறியதாவது,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பன்நெடுங்காலமாக நடைபெற்று வரும் மீலாது நபி விழாக்களில் இஸ்லாம் மார்க்கத்தின் சிறப்புக்களையும் , மாநபியின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாத்தின் வாழ்வியல் ஷரீஅத், ஷரீஅத் சட்டத்தை நிலைநிறுத்திடும் தாய்ச்சபை பணிகளை எடுத்து கூறுவதை கடமையாக கருதுகிறோம்.
அன்று ஆயிரத்தி ஐனூறு வருடங்களுக்கு முன் அரேபிய பாலைவனத்தில் மக்கள் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். கிட்டதட்ட முன்னூற்று அறுபது தெய்வங்களை வணங்கி வந்தனர். மடமை நிறைந்த அக்காலத்தில் பெண் அடிமைத்தனம், குலப்பெருமையால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை, ஒழுக்கமற்ற வாழ்க்கை என்று வாழ்வில் எல்லா நிலைகளிலும் அக்காலத்து மக்கள் அய்யாமுல் ஜாஹிலிய்யா எனும் மடமை காலக்தினர் என்று அழைக்கப்பட்டனர். மதங்களை மூன்று விதமாக பிரிக்கலாம், வேதம் வழங்கப்பட்ட மார்க்கங்கள், ஆரிய மதங்கள் மற்றும் ஆரியமல்லாத மதங்கள்.
இறை தூதர்களை தீர்க்கதரிசிகளாக ஏற்றுக் கொண்ட மதங்கள் செமிஸ்டிக் மதங்கள். நூகு நபியின் மகன் சாம் மற்றும் , இப்ராஹிம் நபியின் வழிவந்த தாவூத் நபி, மூசா நபி, ஈசா நபி, இறுதியாக முஹம்மது (ஸல்) ஆகியோரை நபிகளாக கொண்டதை செமிஸ்டிக் மதங்கள் என்று கூறுவர். இறை தூதர்களை, வேதங்களை பற்றி ஞானம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பெல்லாம் ஆரம்ப குர்ஆன் மத்ரஸாக்களில் குழந்தைகளுக்கு """"தவ்ராத் மூஸா அப்ரானி, ஜபூர் தாவுத் யூனானி, இன்ஜில் ஈசா சுர்யானி புர்கான் முஹம்மது அரபானி’’ என பாடலாக கற்றுக் கொடுப்பார்கள்.வேதங்கள் கொடுக்கப்பட்ட இறை தூதர்களான மூஸா நபிக்கு தவ்ராத் வேதம் அப்ரானி மொழியிலும், தாவுத் நபிக்கு ஜபூர் வேதம் யூனானி மொழியிலும், ஈசா நபிக்கு இன்ஜீல் வேதம் சுர்யானி (ஹிப்ரூ) மொழியிலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு புர்கான் (குர்ஆன்) வேதம் அரபி மொழியிலும் இறைவனால் மக்களை நேர் வழிப்படுத்திட அருளப்பட்டது. இம்மதங்கள் அனைத்திலும் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வருகையை பற்றி கூறப்பட்டிருக்கின்றது.

கி.மு.1500 முதல் 2000 ஈரான் மற்றும் இந்தியாவின் வடக்கில் தோன்றியது ஆரிய மதங்களாகும். வைதீக, பிராமன இந்து மதங்கள் ஒரு பிரிவு, சீக்கிய, ஜைன, சமண மதங்கள் மற்றொன்று நெருப்பை வணங்கும் (மஜீஸிகள்) பெர்சியாவில் தோன்றிய ஜொராஸ்டிரரால் தோற்றுவிக்கப்பட்ட ஜொராஸ்டிரிய மதம்.
ஆரியமல்லாத மதங்களான சீனாவில் கன்பீசியனிஸால் தோற்றுவிக்கப்பட்ட கன்பீயூனிசம், சீனாவின் லவ்தாவேவால் தோற்றுவிக்கப்பட்ட தாவாயிசம் மற்றும் ஜப்பானின் சின்தோயிசம் இப்படியாக மூன்று விதமான மதங்கள் இருக்கின்றன.
அனைத்து மதங்களிலுமே பல்வேறு கோணங்களில் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை குறித்து முன் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. ரிக் வேதத்தில் சுஸ்ரமா (புகழப்பட்டவர்), அதர்வண வேதத்தில் உலகில் மத்திய பகுதியில் (மக்காவில்) தோன்றுவார், பவிஷ்ய புராணத்தில் மனித குலத்தின் மாந்தராக இருப்பார், சாம வேதத்தில் அஹ்மது என்பவர் இறைவனால் இணையில்லாத அறிவை பெற்றவராக இருப்பார் என குறிப்பிடப்பட்டிருப்பது முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றியே கூறப்பட்டிருப்பதாக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
திருக்குர்ஆன் வசனங்களும் """"நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது’’ , """" எவரும் தம் குழந்தைகளை சந்தேகமில்லாமல் அறிவதைப் போல் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதர் தான் என நன்கறிவார்கள்’’ என்றும் கூறகின்றது.
கி.பி 610 ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காமா நகரின் தூர்சினா மலை ஹிரா குன்றில் தவமிருந்தார்கள். அவர்களுக்குள் பல விதமான கேள்விகள், நான் யார் ?, உலகை படைத்தது யார்?, உலகில் ஏன் வாழ்கிறோம் ?, வாழ்க்கை என்றால் என்ன ?, மரணம் என்றால் என்ன ? எம் நம்பிக்கை என்ன? நான் என்ன செய்ய வேண்டும்? இவ்வனைத்திற்கும் விடை அளிப்பதாகவே திருக்குர்ஆன் அருளப்பட்டது.
நபிகள் நாயகம் மனித குலத்திற்கு அருட்கொடையாக, வழிகாட்டும் ஒளி விளக்காக திகழ்கின்றார்கள். மடமை காலத்து அரபு மக்களை உலகம் போற்றும் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் மக்கள் என போற்றும் அளவிற்கு உயர்த்தினார்கள். நபித்துவம் பெறுவதற்கு முன்பே அல்அமீன் உண்மையாளர் என நபிகளார் போற்றப்பட்டார். இஸ்லாத்தை ஏற்காதவர்கள் கூட தங்கள் பொருளை பாதுகாக்க நபிகளாரையே நாடினார். பெண்களுக்கு சொத்துரிமை, விதவைகளுக்கு மறுமணம், பெண்கள் இஸ்லாத்தின் கண்கள் என்று போற்றும் அளவிற்கு பெண் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம்.
இறைவன் வகுத்தளித்த சட்டமும், நபிகளாரின் வாழ்க்கை நெறியும் நமக்கு இருக்கின்றது. இந்த நன்முறை தான் ஷரீஅத் சட்டம். இச்சட்டத்தை இந்திய இஸ்லாமிய சமுதாயம் பேணி வாழ்வதற்கு பணியாற்றி வரும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இன்று சிலர் முஸ்லிம் லீக் என்ன செய்தது? எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாய்மூடிகள், அரசிற்கு பணிந்து பேசுபவர்கள் என்று விபரம் தெரியாமல் கூற தலைப்பட்டிருப்பதை அறிகிறோம். சிலருக்கு இதுவே வாடிக்கையாக இருக்கின்றது, உண்மைதான் வெல்லும். சுதந்திரத்திற்கு முன்பே இந்த நாட்டில் வக்ஃப் சட்டத்தை அறிமுகப்படுத்திய இயக்கம் முஸ்லிம் லீகும் தலைவர் காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னா சாகிப். அரசியல் நிர்ணய சபையின் ஷரீஅத் பாதுகாப்பிற்கு , சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நிலைகளிலும் உரிமைக்குரல் எழுப்பியவர்கள் காயிதெ மில்லத், பேக்கர் சாகிப் போன்றோர். டில்லி ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா, அலிகர் சர்வ கலாசாலை கல்வி ஸ்தாபனங்களின் சிறுபான்மை முஸ்லிம் அந்தஸ்து நிலைபெற போராடியவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப்.
ஷாபானா வழக்கில் ஷரிஅத் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு வந்தபோது பல மணி நேரம் பாராளுமன்றத்தில் வாதாடி தனி நபர் மசோதாவாக கொண்ட வரப்பட்ட பனாத்வாலா பில் இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள செய்த பெருமை முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாகிபை சாரும். சென்ற பாராளுமன்றத்தில் அனைத்து முஸ்லிம் எம்.பிக்களையும் பாரத பிரதமரிடம் அழைத்து சென்று இந்திய முஸ்லிம்களிள் கல்வி மற்றும் பொருளாதார உண்மை நிலையை வெளிபடுத்திய சச்சார் குழு மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழுக்கள் அமைக்கப்பட்டதோடு மத்தியில் சிறுபான்மையினருக்கான தனி அமைச்சரகம் உருவாக காரணமாக இருந்தவர் நம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப்,
இன்றைய தேசிய தலைவர் இ. அஹ்மதின் முயற்சியால் இந்திய - அரபு உறவு மேம்படுத்தப்பட்டது, பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் லிபரான் கமிஷன் அறிக்கை மூலம் அனைவரும் தெரிந்திருக்கின்றனர். இவை அனைத்தும் எதோ நான் மேடைபேச்சுக்காக கூறுபவையல்ல, அனைத்தும் பாராளுமன்ற அவை குறிப்பில் எழுதப்பட்டிருக்கும் உண்மை .
அனைத்து நிலைகளிலும் பின்தங்கியிருக்க கூடிய சிறுபான்மை முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து வருவது பாராட்டுக்குரியது. கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் தான் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். முஸ்லிம்களின் நண்பன் என கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள் 30 ஆண்டுகள் அங்கு ஆட்சியில் இருந்தும் என்ன பயன். ஆனால் 1959 ஆண்டிலேயே முஸ்லிம் லீக் அதிகாரத்தில் இருந்த கேரளத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு விட்டது.
உலமா பெருமக்களை போற்றி கண்ணியப்படுத்துகின்ற இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். 1958 ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் ஊழியர் மாநாட்டில் தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே ஜமாஅத்துல் உலமா சபை, அம்மாநாட்டில் தான் அல்லாமா அமானி ஹஜ்ரத் உலமா சபை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்கள் என்பது வரலாற்று நிகழ்வாகும்.
கட்டாய திருமணச் சட்டம் கொண்டுவரப்பட்ட விஷயத்தில் முஸ்லிம் லீகும் , ஜமாஅத்துல் உலமா சபையும் இரண்டு வேறு குரலாக பேசுவது போல் சிலர் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர், அவர்களின் பகல் கனவு பலிக்கவில்லை இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் ஜமாஅத்துல் உலமா சபையும் ஒன்றினைந்தே ஷரிஅத் பாதுகாப்பு போராட்டம் உள்ளிட்ட மார்க்க விஷயங்களில் போராடி வெற்றி கண்டிருக்கின்றோம். இவ்விரண்டு அமைப்புகளும் சமுதாயத்தின் இரட்டை குலல் துப்பாக்கிகள் என்பதை உறுதியிட்டு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். யாரும் குழப்பம் அடைய தேவையில்லை.
கட்டாய திருமணச் சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டபோது அனைத்து அமைப்பினரையும் அழைத்து முதலில் முஸ்லிம் லீக் சார்பிலேயே கலத்தாலோசனை செய்யப்பட்டது.
சட்டமன்றத்திலும் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏக்கள் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்துடன் தமிழக அரசு கலந்தாலோசனைகள் செய்ய வேண்டுமென பேசியிருக்கின்றனர். தொடர்ந்து பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் வாயிலாகவும் தாய்ச்சபையின் நிலையை அரசிற்கு தெரிவித்திருக்கின்றோம். ஆத்திரப்பட்டோ, அவசரப்பட்டோ நம்மால் எதையும் சாதிக்க முடியாது அறிவுப்பூர்வமாக மதி நுட்பத்துடன் சட்ட ஆலோசனைப் பெற்று தீர்த்தமாக முடிவு எடுக்கலாம் என்ற அடிப்படையில் இன்று அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் தெளிவாக ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன. அடுத்த வாரம் தமிழக சட்ட அமைச்சர் உள்ளிட்ட சிறுபான்மை நல அதிகாரிகளுடனும், தொடர்ந்து முதல்வர் அவர்களையும் சந்திக்க ஏற்பாடுகள், ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களால் நடைபெற்று வருகின்றது. நம் ஐயப்பாடுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் தி.மு.க. பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதற்கு சமுதாயத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மத்திய அரசு பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கென 2600 கோடி ரூபாய் வழங்கி இருப்பதற்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். அரசின் திட்டங்கள் முழுமையாக நம் சமுதாயத்திற்கு சென்றடைய வேண்டுமென்றால் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் ,மஹல்லா ஜமாஅத்தினரும் முனைப்போடு பணிகளாற்ற வேண்டும். கல்வி உதவித் தொகை பெறுவதிலும், சிறு தொழில் உதவி , மகளிர் சுய உதவிக் குழு உள்ளிட்ட அரசு திட்டங்கள் நாமும் அறிந்து சமுதாயத்தினரை பலனடையச் செய்ய வேண்டும்.
42 ஆண்டு காலமாக தொய்வின்றி இங்கு மீலாது பெருவிழா நடத்தி வரும் மேட்டுப்பாளையம் நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்விழாக்களில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளோடு சமூக நலப்பணிகளையும் செய்திட அன்புடன் வேண்டுகிறேன். முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணியில் கவனம் செலுத்தி, ஏற்கனவே 4 ஆயிரம் இருந்த இந்த ஊரில் குறைத்தது 5 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுங்கள் . தலைமையின் ஒத்துழைப்பு என்றும் உங்களுக்கு இருக்கும் என்பதை தெரிவித்து நிறைவு செய்கின்றேன்.
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசினார். நகர செயலாளர் அக்பர் அலி நன்றி வறி திண்டுக்கல் மௌலவி ஹாரூன் ராஷீத் தஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment